கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வகையில் மக்களிடையே வரவேற்பையும், சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்திய திரைப்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு பிரிவுகளின் கீழ், வல்லுநர் குழுவின் தீவிர ஆலோசனைக்கு பிறகு, ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல் ஆஸ்கர் விருதினை பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தட்டிச் சென்றார். "ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் ஹாலிவுட்" எனும் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பிராட் பிட்டுக்கு 'சிறந்த துணை நடிகர்' எனும் பிரிவில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு மேலாக ஹாலிவுட் திரைத்துறையில் குறிப்பிடத்தக்க நடிகராக விளங்கி வரும் பிராட் பிட் தனது நடிப்பு திறமைக்காக பெறும் முதல் ஆஸ்கர் விருது இதுதான்.
அதே போன்று, சிறந்த துணை நடிகைக்கான விருதை 'மேரேஜ் ஸ்டோரி' எனும் படத்தில் நடித்த லாரா டெர்ன் பெற்றார்.
ஜோக்கர் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வாக்கின் ஃபீனிக்ஸ் வென்றார்.
நீண்டகால இடைவேளைக்கு பிறகு திரைப்படத்துறைக்குள் நுழைந்த ரெனீ ஜெல்வெகர், 'ஜூடி' என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
அதே போன்று, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தென்கொரிய திரைப்படமான 'பாராசைட்' பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை இயக்கிய போங் ஜோன்-ஹோ சிறந்த இயங்குநருக்கான ஆஸ்கர் விருதை பெற்றார்.
இதன் மூலம் 91 ஆண்டுகால ஆஸ்கர் விருதுகள் வரலாற்றில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெறும் முதல் ஆங்கிலம் அல்லாத திரைப்படமாக பாராசைட் உருவெடுத்துள்ளது. இந்த திரைப்படம் மொத்தம் நான்கு ஆஸ்கர் விருதுகளை இந்த ஆண்டு குவித்துள்ளது.
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை 'லிட்டில் வுமன்' திரைப்படத்தில் பணியாற்றியதற்காக ஜாக்குலின் டர்ரன் பெற்றார்.
No comments:
Post a Comment