“விண்வெளியில் பூமிக்கு மிக அருகில் புதிய கருந்துளை கண்டுபிடிப்பு” - globalyard

Do you know?


Thursday, May 14, 2020

“விண்வெளியில் பூமிக்கு மிக அருகில் புதிய கருந்துளை கண்டுபிடிப்பு”

விண்மீன் தொலைநோக்கியில் இருந்து பார்க்கும்போது சுமார் 1,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கருந்துளை உள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
இது உங்களுக்கு அருகில் இருப்பது போன்ற உணர்வை தராமல் இருக்கலாம். ஆனால், உண்மையில் பூமியின் அளவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, இது பக்கத்து வீட்டுக்குள்ள தொலைவே என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.
இரண்டு நட்சத்திரங்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை அடிப்படையாக கொண்டு இந்த கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
பொதுவாக, கருந்துளைகள் வாயு மற்றும் தூசி ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளும் விதத்தில் இருந்து கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த செயல்முறையின்போது ஏராளமான எக்ஸ்-கதிர்கள் வெளியேறுகின்றன.
இதற்கு முன்பு வரை, இந்த உயர் ஆற்றல் வெளிப்பாட்டை தொலைநோக்கிகள் வாயிலாக பார்த்தே அங்கு கருந்துளைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து வந்தனரே தவிர, அவர்கள் நேரடியாக கருந்துளையை கண்டறிந்தது இல்லை.
அந்த வகையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கண்டுபிடிப்பு, அசாதாரணமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கருந்துளையுடன் தொடர்பில் உள்ள இரண்டு நட்சத்திரங்களுக்கு ஒன்றாக எச்ஆர் 6819 என்று பெயர்.
"இதை நீங்கள் ஓர் 'இருண்ட கருந்துளை' என்று அழைக்கலாம்; இது உண்மையிலேயே கருப்பு என்ற அர்த்தத்தை உறுதிப்படுத்துகிறது" என்று ஜெர்மனியின் கார்ச்சிங்கில் உள்ள ஐரோப்பிய தெற்கு ஆய்வக (ESO) அமைப்பின் வானியலாளரான டீட்ரிச் பேட் கூறினார்.
“இந்த வகையில், கருந்துளை ஒன்று கண்டறியப்படுவது இதுவே முதல்முறை என்று நான் கருதுகிறேன். அதுமட்டுமின்றி, பூமிக்கு அருகே புதிதாக உருவாகி வரும் கருந்துளைகளையும் சேர்த்து பார்த்தாலும், தற்போது கண்டறியப்பட்டுள்ள கருந்துளைதான் பூமிக்கு மிக அருகில் உள்ள ஒன்று” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
இந்த கதையின் ஒரு வியத்தகு அம்சம் என்னவென்றால், HR 6819 நட்சத்திரங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும். ஆனால், அதற்கு தெற்கு வானத்தை காணும் வாய்ப்பு நமக்கு இருக்க வேண்டும். அது மட்டும் இருந்துவிட்டால், தொலைநோக்கி அல்லது பைனாக்குலர் என எதுவும் தேவையில்லை. ஆனால், நட்சத்திர அமைப்பு சூரியனின் பின்னால் இருந்துதான் வெளிப்படுகிறது என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
விஞ்ஞானிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு Be நட்சத்திரம் என்று அழைக்கப்படும் ஒன்றை தேடும்போதே HR 6819 பற்றிய ஆய்வைத் தொடங்கினர். மிகவும் வேகமாகச் சுழலும் இந்த நட்சத்திரம், தன்னைத்தானே சிதைவுற செய்கிறது.
நீண்ட காலமாக நடைபெற்று வந்த இதுகுறித்த ஆராய்ச்சி சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது.
சிலியில் உள்ள லா சில்லா ஆய்வகத்தில் 2.2 மீட்டர் தொலைநோக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரண்டு நட்சத்திரங்களின் உட்புற பகுதியும் 40 நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு தெரியாத பொருள் ஒன்றை சுற்றி வருவதை வெளிப்படுத்தின.
கருந்துளை எனக் கருதப்படும் இந்த பொருள் சூரியனைவிட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக நிறையை கொண்டிருக்கலாம்.
இதுவரை நமது பால்வழி அண்டத்தில் இருபதிற்கும் மேற்பட்ட கருந்துளைகளைதான் வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை தனது அகந்திரள் வளிம வட்டுகளுடன் (Accretion Discs) வலுவான தொடர்பை கொண்டுள்ளன.
ஆனால் புள்ளிவிவரங்களோ, பால்வழி அண்டத்தில் இன்னும் பல்வேறு கருந்துளைகள் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது.
"பால்வழி அண்டத்தில், சுமார் 100 மில்லியன் கருந்துளைகள் இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. எனவே, பூமிக்கு மிக அருகில் இன்னும் எண்ணற்ற கருந்துளைகள் இருக்கலாம்" என்று வானியல் ஆராய்ச்சியாளரான மரியான் ஹெய்டா பிபிசி செய்தியிடம் தெரிவித்தார்.
இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக விளக்க கட்டுரையொன்று, ஆஸ்ட்ரோனோமி & ஆஸ்ட்ரோபிசிக்ஸ் எனும் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment